தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல்முறையாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் மேடைகளிலும் கணினி பொருத்தப்பட்டுள்ளது. நிதியமைச்சர் வாசிக்கும் நிதிநிலை அறிக்கை சட்டமன்ற உறுப்பினர்களின் கணினியில் ஒளிரும். அத்துடன் இதை தொடுதிரை மூலம் காகிதம் போலவும் திருப்பி படித்துக் கொள்ளலாம்.
தமிழக பட்ஜெட் உரையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாசிக்கத் தொடங்கினார். பட்ஜெட் உரையின் போது அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். தங்களுக்கு பேச அனுமதி அளிக்குமாறு அவர்கள் கூச்சலிட்ட போது எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதியாக இருக்கச் சொல்லி சபாநாயகர் அறிவித்தார் . இருப்பினும் பட்ஜெட் உரையை எதிர்த்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதைத் தொடர்ந்து பேச ஆரம்பித்த நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அனைத்து துறைகளின் நடைமுறைகளும் முழுமையாக கணினி மயமாக்கப்படும், ஜிஎஸ்டி வரி செயல்பாட்டில் பல சிக்கல்கள் உள்ளன. ஆறு மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்படுகிறது என அறிவித்தார்.
*மத்திய அரசின் வரிமுறை மாநில அரசின் நிதியை திசை திருப்பி கூட்டாட்சிக்கு முரணாக உள்ளது
* கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.9,370 கோடி வழங்கப்பட்டுள்ளது
* 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகளும் கதவணைகளும் கட்டப்படும்
* உணவு மானியத்திற்கான ஒதுக்கீடு ரூ.8,437 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது
* காடுகளை மேம்படுத்த தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு உருவாக்கும்; ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்
* தமிழக காவல்துறையில் 14,317 காலியிடங்கள் நிரப்பப்படும்
* பாசன திட்டங்களுக்காக ரூ.6,607 கோடி நிதி ஒதுக்கீடு; மீன்வளத் துறைக்கு ரூ.303 கோடி ஒதுக்கீடு
* காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரூ.150 கோடியில் மேம்படுத்தப்படும்; மீனவர் நலனுக்காக ரூ.1,149 கோடி ஒதுக்கீடு
* தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு ரூ.30 கோடியில் செயல்படுத்தப்படும்
* ரூ.111 கோடி செலவில் 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும்
* மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர்தேக்க கொள்ளளவு பழைய நிலைக்கு உயர்த்தப்படும்
* உயர்கல்வி மாணவர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு தொழில்நுட்ப புத்தகங்கள் தமிழில் வெளியிடப்படும்
* கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இணைய வழியில் கண்காணிக்கப்படும்; ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் நிறுவப்படும்.