நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோரை போல தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான செல்வந்தர்கள் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்துள்ளனர். அவர்களும், காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அவை நிலுவையில் இருந்து வருகின்றன.
இதில் சில வழக்குகள் ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வணிக வரித்துறை அதிகாரி ஒருவர் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். அவரிடம் நீதிபதிகள், ‘வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்களுக்கு ஏராளமானோர் நுழைவு வரி செலுத்தாமல், ஐகோர்ட்டில் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். அப்படி எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன? அவற்றின் எண்கள் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அந்த அதிகாரி, ‘வணிக வரித்துறையில் ஆலந்தூர் உதவி கமிஷனராக உள்ளேன். என் அதிகாரத்துக்கு உட்பட்டதில் 2 வழக்குகள் மட்டுமே உள்ளன’என்றார். இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வக்கீலிடம் நீதிபதி கூறியதாவது:-
நுழைவு வரி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 2019-ம் ஆண்டே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
ஆனால், வரியை வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக நிதி அமைச்சர்கூட வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிகாரிகள் ஒழுங்காக வரியை வசூலிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
வரியை வசூலிக்காமல் இழுத்தடித்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டேன். அந்த உத்தரவின்படி அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
வணிக வரித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், அரசுக்கு வரவேண்டிய வருவாய் காலதாமதம் ஆகிறது.
ஆனால் அதிகாரிகளுக்கு மாதத்தின் கடைசி நாளில் அரசு சரியாக ஊதியம் வழங்குகிறது. சரியாக வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு 4 நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் ஏற்றுக்கொள்வார்களா? வரி வசூலிக்கும் பணியில் உள்ள அதிகாரிகள் முறையாக வரி வசூலிக்கவில்லை என்றால், அரசை நடத்த முடியாது. எனவே, சொகுசு கார் நுழைவு வரி தொடர்பான அனைத்து வழக்குகளின் விவரங்களையும் வணிக வரித்துறை ஆணையர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.