ஜார்கண்ட் மாநிலம் தன்பாதில் மாவட்ட நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று நடைபெற்றது.
ஜார்கண்ட் மாநில அட்வகேட் ஜெனரல் ராஜீவ் ரஞ்சன் ஆஜராகி, நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அண்டை மாநில குற்றவாளிகளும் ஈடுபட்டிருக்கலாம் என்பதாலும், இது தீவிரமானது என்பதாலும் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது. நீதிபதிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா, அப்படியென்றால் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. திங்கள் கிழமை ஆஜராகட்டும். கோர்ட்டுகளில் சமூக விரோதிகள் நுழைவதைத் தடுத்து, நீதிபதிகள் சுதந்திரமாக பணியாற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் கோரி கருணாகர் மாலிக் தாக்கல் செய்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
அந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வகையில் பதில்மனுவை மத்திய அரசும், பதில் மனு தாக்கல் செய்யாத மாநில அரசுகளும் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்டு 17-ந் தேதிக்குத் தள்ளிவைக்கிறோம் என உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி ரமணா, சமூகவிரோத கும்பல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் சில இடங்களில் வாட்ஸ்அப்பில் தகவல்களை அனுப்பி மனரீதியாக அச்சுறுத்தப்படுகின்றனர். நீதிபதிகள் மிரட்டப்படும் சம்பவங்கள் மோசமானவை.
இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டும் சி.பி.ஐ. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விஷயத்தில் உளவுத்துறையும், சி.பி.ஐ.யும் நீதித்துறைக்கு உதவுவதில்லை. ஜார்கண்ட் மாநிலத்தில் இளம் நீதிபதி கொல்லப்பட்ட சம்பவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நிலக்கரி கடத்தல் மாபியாக்கள் உள்ள பகுதியில் வசிக்கும் நீதிபதிகளுக்கும், அவர்களின் குடியிருப்பு காலனிக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்தார்.