மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் அருகே நேற்று கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதற்காக தஞ்சை திலகர் திடலில் இருந்து அண்ணாமலை மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் மாட்டுவண்டிகளில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்தை நோக்கி வந்தனர். மாட்டு வண்டி அண்ணா சிலை அருகே வந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுத்தனர். இதையடுத்து அண்ணாமலை மற்றும் பா.ஜ.க.வினர் அங்கு இறங்கி உண்ணாவிரத பந்தலுக்கு நடந்தே வந்தனர். அங்கு உண்ணாவிரத போராட்டத்தை கட்சியின் தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தொடங்கி வைத்தார்.
போராட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனைக்காக மாதந்தோறும் ஆய்வு கூட்டத்தை கூட்டும் தமிழக அரசு, விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்களுடைய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக இதுவரை ஒரு ஆய்வு கூட்டமாவது நடத்தியது உண்டா?.
1924-ம் ஆண்டு காவிரி விஷயத்தில் மாநிலத்திற்கு இடையிலான ஒப்பந்தம் 50 ஆண்டு காலம் நீடித்தது. ஆனால் 1974-க்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விட்டு விட்டார். அத்துடன் உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசிதழில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை. எனவே விவசாயிகளைப் பற்றி புரியாமல் ஆட்சி நடத்தும் கட்சிதான் தி.மு.க.
கர்நாடகாவில் உள்ள ஆளும்கட்சியினர், எதிர்க்கட்சியான காங்கிரஸ் என அனைத்து அமைப்பினரையும் எதிர்த்து நாங்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம். அணை கட்டமுடியாது என சட்டம் தெளிவாக உள்ளது என்றார்.
அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், பாராளுமன்ற கூட்டத்தொடரில் கர்நாடக எம்.பி., ஒருவர் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கைக்கு எப்போது மத்திய அரசின் அனுமதி வழங்கப்படும்? என கேள்வி எழுப்பியபோது, மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர செகாவத், மேகதாது திட்ட அறிக்கைக்கு கடைமடை மாநிலமான தமிழகத்தின் அனுமதி, காவிரி மேலாண்மை வாரியம் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு அனுமதி அளிக்காது என திட்டவட்டமாக பதில் அளித்துள்ளார். இதனால் மேகதாது பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது என்றார்.