கொரோனா தொற்று லேசாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.
இந்த மாதிரி வீடுகளில் முடங்கி கிடப்பவர்கள் வெளியே சென்று பொருட்கள் எதுவும் வாங்க முடியாது.
மேலும் உடல் சோர்வு போன்ற காரணங்களால் வீடுகளில் சமையல் செய்து சாப்பிடவும் சிரமப்படுகிறார்கள்.
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மட்டும் இந்த மாதிரி தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் 2480 பேர் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் திட்டத்தை இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
வீட்டு தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் பெயர் விபரம், முகவரி ஆகியவை சேகரிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு வழங்க உணவு தயாரிப்பதற்காக தனியாக சமையல் கூடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அங்கு தயாரிக்கப்படும் உணவை இந்த பணியில் ஈடுபடும் 100 களப்பணியாளர்கள் வீடு தேடி சென்று விநியோகிப்பார்கள்.
காலையில் இட்லி, பொங்கல், கிச்சடி, போன்றவை வழங்கப்படும். மதியம் சாப்பாடு, இரவு டிபன் என்று 3 வேளையும் இலவசமாக வழங்கப்படும்.
இந்த மனிதநேய உதவி கொரோனா கட்டுப்படும் வரை தொடர்ந்து நடைபெறும் தினமும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வீட்டுத்தனிமைக்கு பரிந்துரைக்கப்படுபவர்களின் பெயர் பட்டியலை பெற்று உணவு வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
முதல் நாளான இன்று காலை சிற்றுண்டியாக இட்லி, பொங்கல், வடை, கேசரி வழங்கப்பட்டது. மதியம் சாப்பாடு வழங்கப்படுகிறது. 3 வேளையும் சைவ உணவே வழங்கப்படும்.