தமிழ்நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 20 ஆயிரம் போலீசார் முழு ஊரடங்கை கண்காணிக்கும் பணியை செய்து வருகிறார்கள். அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோர் மட்டும் தகுந்த சான்றிதழ், அடையாள அட்டைஇருந்தால் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆன்லைன் மூலம் உணவு வினியோகம் செய்வோர் இரு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேவை இல்லாமல் யாரும் வெளியே நடமாடக்கூடாது என்பதால் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருவதால், இன்று அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய நகரங்களில் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணாசாலை வெறிச்சோடியது. மக்கள் நடமாட்டம் அலைமோதும் தி.நகர், பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களும், கோயம்பேடு மார்க்கெட், கொத்தவால் சாவடி ஆகிய இடங்களும் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.
வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்று போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர். வாகன சோதனையும் தீவிரமாக நடந்தது. உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 153 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே 205 இரு சக்கர ரோந்து வாகனங்களும், 309 நான்கு சக்கர வாகனங்களிலும் போலீசார் கண்காணித்து வந்தனர். இன்று இவை மேலும் தீவிரப்படுத்தப்பட்டன.
ஊரடங்கை கடுமையாக்குவதற்காக ‘டிரோன்’ மூலமும் கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார். நகரின் பெரும்பாலான பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸ் கண்காணிப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.