அரசியல், மத கூட்டங்களை நிறுத்தவில்லை என்றால் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவும் பின் யாரும் நமக்கு உதவ முடியாது என டாக்டர் என்.கே. அரோரா எச்சரிக்கை செய்துள்ளார்.
நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்.டி.ஏ.ஜி.ஐ.) குழுவின் கோவிட்-19 பணிக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாம் பாா்பது என்னவென்றால், இளைஞர்கள் மிகவும் கவனக்குறைவாக உள்ளனர். சிறிய கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். மேலும், சமூக மற்றும் மத கூட்டங்கள், விவசாயிகள் போராட்டம் மற்றும் அரசியல் பேரணிகளை நாம் பார்த்தோம். இவை அனைத்தும் கோவிட்-19ஐ அதிவேகமாக பரப்பும் இடங்கள்.
இவற்றை நிறுத்தவில்லை என்றால், யாரும் நமக்கு உதவ முடியாது. இவை அனைத்தையும் பற்றி நாம் மிகவும் விமர்சிக்க வேண்டும். இறுதியாக, இவற்றை அரசியல் மற்றும் அதிகாரத்தை செயல்படுத்தும் அமைப்பின் ஆதரவுடன் செய்ய வேண்டும் என்று நான் சொல்வேன்.
நம்மிடம் கடந்த ஆண்டின் லாக்டவுன் அனுபவம் உள்ளது. இந்த நோயை எப்படி கட்டுப்படுத்துவது எப்படி என்பதை நாம் கற்றுக்கொண்டோம். லாக்டவுனுக்கு பிறகு நமது பொருளாதாரத்துக்கு எப்படி மீண்டும் ஊக்குவிப்பது என்பதையும் நாம் கற்றுக்கொண்டோம்.
தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தொடும்போது நாம் கடந்த கால அனுபவத்தை பயன்படுத்த வேண்டும். தொடர்புகளை குறைப்பதன் மூலம் மக்கள் இடையே கொரோனா பரவுவல் குறைப்பதை அடைய முடியும். ஒரு மாவட்டத்தின் ஒரு பகுதி போல் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நாம் லாக்டவுன் அமல்படுத்துவது அவசியம். உதாரணமாக மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால் அங்கு 15 தினங்களுக்கு ஒரு பகுதி லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.