திருப்பதியில் மொட்டை அடித்து பக்தர்கள் அளித்த காணிக்கை முடி மியான்மர் எல்லையில் கிடைத்திருப்பது ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவாஸ்தானத்திலிருந்து அந்த தலைமயிர் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டது என பல ஊகங்களும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இது கடவுள் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால் பக்தர்கள் மத்தியில் இது விவாதமாகி வருகிறது.
மேலும் 1.8 கோடி மதிப்பிலான இந்த தலை மயிர் மூட்டைகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டன? அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்? சில தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக வலைத்தள கணக்குகள் மீது இது தொடர்பாக ஏன் வழக்கு தொடரப்பட்டுள்ளது?
இரண்டு மாதங்களுக்கு முன், அசாம் ரைஃபிள்ஸ் என்ற துணை ராணுவப் படையின் 23ஆம் பிரிவை சேர்ந்த செர்ச்சிப் பட்டாலியன், சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட இந்த தலை மயிரை தடுத்து நிறுத்தினர். இந்த தகவல் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற்ற தேடுதல் பணியில் இந்த விஷயம் அம்பலமானது.
மேலும் மிசோரம் மாநிலத்தில் உள்ள இந்தோ- மியான்மர் எல்லையில் இந்த சட்டவிரோத கடத்த மயிர் கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக இந்த பகுதியில் தேடுதல் பணி நடந்தால், போதைப் பொருளோ, தங்கமோ அல்லது வன விலங்குகளோ கண்டுபிடிக்கப்படும். ஆனால் முதன்முறையாக பாதுகாப்பு படையினர், 120 பைகள் நிறைய மனித தலை மயிரைக் கண்டுபிடித்துள்ளனர். ஒவ்வொரு பையிலும் 50 கிலோ எடையுள்ள மயிர் இருந்துள்ளது. மார்ச் 20ஆம் தேதி வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் ட்ரக் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட மயிரை ராணுவம் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட வாகனத்தின் ஓட்டுநர், அந்த மயிர் திருப்பதியிலிருந்து கொண்டுவரப்படுகிறது என்று கூறியதாக ஊடகங்களிடம் சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.