பிரதேச சபையில் வீதி தொழிலாளர்கள், சாரதிகள், காவலாளிகள், தற்காலிக அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வருவதாக தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச சபையின் 36வது சபை அமர்வு பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்றது.
ஓட்டமாவடி பிரதேச சபையில் வீதி தொழிலாளர்கள், சாரதிகள், காவலாளிகள் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்கள் ஆகியோரது சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று சபையினால் பல முறை தீர்மானிக்கப்பட்ட போதிலும் சபையின் வருமான இழப்பு காரணமாக கடந்த காலங்களில் சம்பள அதிகரிப்பினை மேற்கொள்ள முடியாதிருந்தது.
இருந்த போதிலும் ஊழியர்களது தியாகம், தற்போதைய விலைவாசி அதிகரிப்பு என்பன கருத்திற்கொள்ளப்பட்டு மேற்படி தற்காலிக ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வருவதாக தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச சபைக்கு சுப்றா தரமுள்ள செயலாளர் நியமிக்கப்பட வேண்டுமென பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸல் றஹீமால் முன்வைக்கப்பட்ட பிரேரணை பதினைந்து மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸல் றஹீமால் குறித்த பிரேரணை முன்மொழியப்பட்டதுடன், பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் மௌலவி வழிமொழிந்து சபையின் பதினைந்து உறுப்பினர்களின் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது பிரதேச சபை செயலாளர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஒட்டுமொத்த சமூகத்தின் அர்ப்பணிப்பை ஒரு அரசியல்வாதியின் புகழ்பாடி கொவிட் 19 ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் பொய்யான தகவல்களை நாட்டுக்கு வழங்கி ஓட்டமாவடி பிரதேச சபைக்கு மிகப்பெரும் அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றது.
சபை அமர்வின் போது பிரதேச சபை உரையாற்றுவதற்கு வழங்கப்படும் ஐந்து நிமிடம் மக்கள் பிரச்சனைகள் தொடர்பில் உரையாடுவதற்கு நேரம் போதாமை காரணமாக நேரத்தினை அதிகரித்து தருமாறு சபை உறுப்பினர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.