கேரள சட்டசபை தேர்தல், ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதையொட்டி, பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கொச்சி அருகே உள்ள திருப்புனித்துரா நகரில், பா.ஜனதா வேட்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று ஓட்டு சேகரித்தார்.
கிழக்கு கோட்டை என்ற இடத்தில் தொடங்கி பூர்ணத்ரயீசர் கோவில் அருகே ஊர்வலம் முடிந்தது. சாலையின் இருமருங்கிலும் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து கும்பிட்டபடியே அமித்ஷா சென்றார்.
இந்த பிரசாரத்துக்கு இடையே அமித்ஷா நிருபர்களிடம் கூறியதாவது:-
தங்க கடத்தல் வழக்கை மத்திய விசாரணை அமைப்புகள் விசாரிப்பது இயல்புதான். இந்தியாவில் நடந்த ஊழலை ஐ.நா. அமைப்பா விசாரிக்கும்? இந்த ஊழலில் தனது முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கு தொடர்பு உள்ளதா என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் விளக்கம் அளிக்க வேண்டும்.
இந்த ஊர்வலத்துக்கு திரண்ட கூட்டத்தை பார்க்கும்போது, இடதுசாரி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜனதாவை மக்கள் பார்ப்பது தெளிவாக தெரிகிறது. அவர்கள் பா.ஜனதாவை ஆதரிப்பார்கள்.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.
பின்னர், காஞ்சிரபள்ளி தொகுதிக்கு சென்ற அமித்ஷா, முன்னாள் மத்திய மந்திரி கே.ஜே.அல்போன்சுக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது, உத்தரபிரதேசத்தில் ரெயிலில் சென்ற கேரள கன்னியாஸ்திரிகள் மத மாற்ற முயற்சியில் ஈடுபடுவதாக பஜ்ரங்தள தொண்டர்கள் பொய்ப்புகார் கொடுத்ததாகவும், இதனால் அந்த கன்னியாஸ்திரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டதாகவும் அல்போன்ஸ் முறையிட்டார்.
பின்னர் பேசிய அமித்ஷா கூறியதாவது:-
உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. எனவே, இந்த சம்பவத்துக்கு பின்னணியில் உள்ள குற்றவாளிகள் விரைவில் சட்டத்துக்கு முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று கேரள மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.