இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண்டுமா? என்று அதிமுக நிர்வாகிகள் வெளிப்படையாகவே ஆதங்கப்பட்டுக் கொண்டனர்.
வேலூர் மக்களவை தொகுதியில் காலை 7 மணிக்குத் தொடங்கி ஆறு மணி நேரம் கடந்து மதியம் 1 மணி ஆனபிறகும் கூட 30 சதவிகிதம் கூட வாக்குப் பதிவாகவில்லை என்ற தகவல் கதிர் ஆனந்த், ஏ.சி. சண்முகம் இருவருக்குமே கொஞ்சம் கலக்கத்தைதான் ஏற்படுத்தியது. ஒருவேளை தேர்தலையே மக்கள் விரும்பவில்லையா அல்லது வாக்காளர்களுக்கு வாரி வழங்காததால் வாக்களிக்கும் சதவிகிதம் குறைந்துவிட்டதோ என்ற விவாதம் இரு கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் பேசப்பட்டது.
இந்த நிலையில்தான் அடுத்த இரண்டு மணி நேரத்தில் கிடுகிடுவென வாக்குப் பதிவு சதவிகிதம் ஏறத் தொடங்கியது. திமுகவினருக்கு அப்போதுதான் உயிரே வரத் தொடங்கியது. காரணம் சாரை சாரையாய முஸ்லிம் வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களித்தனர். மதியம் வரை மந்தமாகிக் கொண்டிருந்த வாக்குப் பதிவுக்குக் காரணமும் முஸ்லிம் வாக்காளர்கள்தான். மதியத்துக்குபின் சுறுசுறுப்பாக ஆனதற்கும் காரணமும் அவர்கள்தான். காரணம் காலை 11 மணிக்குதான் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்ற மாநிலங்களவையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப் பிரிவை நீக்கும் அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.
ஆங்கில மீடியாக்கள் மட்டுமல்ல தமிழ் மீடியாக்களிலும் 11 மணிக்கு மேல் இதுதான் பெரும் செய்தியாக பேசப்பட்டது. குறிப்பாக தமிழ் சேனல்களில் வேலூர் தேர்தலை விட காஷ்மீர் விவகாரம்தான் பெரும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. வேலூர் மக்களவைத் தொகுதியில் கணிசமான உருது பேசும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்கள் மத்தியிலும் இந்த காஷ்மீர் பிரச்சினை தீவிரமாகப் பரவியது.
மதியத்துக்குப் பின் பலரது செல்போன்களிலும் இந்த செய்திகள் பகிரப்பட்டன. ஏற்கனவே பாஜக மீது அதிருப்திக்கு உள்ளாகியிருக்கும் முஸ்லிம்கள், காஷ்மீர் விவகாரத்தில் பாஜக அரசு செய்ததை ஏற்கத் தயாராக இல்லை. மீடியாக்கள் வழியாக காஷ்மீர் விவகாரம் அதிகமாகப் பரவியதையடுத்து மதியத்துக்கு மேல் சாரை சாரையாக திரண்டு வாக்களிக்க ஆரம்பித்தனர். ஏற்கனவே முத்தலாக் பிரச்சினைக்கு ஓ.பி.ஆர். ஆதரவு அளித்ததால் அதிமுகவுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டது. இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண்டுமா? என்று அதிமுக நிர்வாகிகள் வெளிப்படையாகவே ஆதங்கப்பட்டுக் கொண்டனர். ஆக துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு கடைசி நேரத்தில் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.