சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிருஷ்ணவேணி சசிகுமாரை ஆதரித்து நேற்று கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் சாதிக்காக, மதத்திற்காக, மொழிக்காக, திராவிடத்திற்காக கட்சி நடத்துகிறார்கள். ஆனால் மக்களுக்காக கட்சி நடத்துபவர்கள் நாம் தமிழர் கட்சி சகோதர, சகோதரிகளும், நமது பிள்ளைகளும் தான். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் தரமான கல்வி, தரமான மருத்துவம் இலவசமாகவும், தரமான குடிநீர், தரமான சாலைகள் போன்றவை செய்து தருவோம்.
மேலும் விவசாயம் மேம்படும். விவசாயம் என்பது தொழில் அல்ல, அது ஒரு பண்பாடு. மருத்துவரிடமும், பொறியாளரிடம், வக்கீல்களிடமும் செல்லாமல் வாழலாம். ஆனால் விவசாயிடம் செல்லாமல் எவரும் வாழ முடியாது. விவசாயத்தை உயிர்ப்பிக்க செய்ய வேண்டும். விவசாயி வாழ வேண்டும். அவர்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி தரவேண்டும்.
மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன். தயவு செய்து ஏமாற்றி விடாதீர்கள். எங்களுக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு தமிழகத்தை தலை நிமிர செய்யும்.
இவ்வாறு சீமான் பேசினார்.
முன்னதாக வாழப்பாடியில், ஏற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜோதிக்கு ஆதரவாக சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறும் போது, தமிழக மக்களை நம்பி நாங்கள் தேர்தல் களத்தில் நிற்கிறோம். எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. தமிழையும், தமிழ் மக்களையும் நேசிக்கிறோம். தமிழகத்தில் எழுச்சி ஏற்படுத்த தனித்து போட்டியிடுகிறோம்.
அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் வெற்றி பெறுவது என்பது வழக்கமாக நடைபெறுவது தான். ஆனால் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் இது வரலாற்று புரட்சியாகும். நாம் தமிழர் கட்சியின் சின்னம் கரும்புடன் கூடிய விவசாயி சின்னம். கரும்பை பிழிந்தாலும் அதன் சாறு எப்படி நமக்கு ருசியை கொடுக்கிறதோ, அதுபோல, நாங்களும் எங்களை வருத்திக் கொண்டு உங்களுக்காக உழைப்போம். பாடுபடுவோம். அதற்காகத்தான் கரும்புடன் கூடிய விவசாயி சின்னத்தை நாங்கள் பெற்றுள்ளோம் என்று கூறினார்.