எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியமான டைக்ரேயின் முன்னாள் ஆளும் கட்சி, அரசாங்கத்திற்கு எதிரான தமது போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது.
எத்தியோப்பிய அரசாங்கத்துடன் போராடி வரும் முன்னாள் ஆளும் கட்சியான டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியுடன் (TPLF) இணைந்த பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள குரல் பதிவொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தலைமறைவாகியுள்ள டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஜெப்ரெமிகேல்லின் குரல் பதிவு என தெரிவிக்கப்பட்டுள்ள குறித்த பதிவில், எத்தியோப்பிய அரசாங்கம் டைக்ரே பிராந்தியத்தில் வன்முறைகளைக் கட்டவிழ்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் குரல் பதிவில், “மத்திய அரசு டைக்ரேயில் தற்காலிக இராணுவ ஆதிக்கத்தைக் கொண்டுள்ளது. பாலியல் பலாத்காரம் மற்றும் கொள்ளை போன்ற உரிமை மீறல்களை எத்தியோப்பிய இராணுவத்தினர் செய்து வருகின்றனர். இது தொடர்பான அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையால் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
நாங்கள் அரசாங்கத்துக்கு எதிரான எமது போராட்டத்தைத் தொடரவுள்ளோம். டைக்ரேயின் நகரங்களும் கிராமப் புறங்களும் கனரக பீரங்கிகளால் இரவும் பகலும் குண்டு வீச்சுக்கு உள்ளாகின்றன.
இதேவேளை, எத்தியோப்பியன் அரசாங்கத்தைக் கண்டிக்கவும், எமது போராளிகளுக்கு நிதி மற்றும் உதவிகளை வழங்கவும் வெளிநாடுகளில் உள்ள டைக்ரேயன்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
எத்தியோப்பிய பிரதமர் அபி மற்றும் எரித்திரிய ஜனாதிபதி இசயாஸ் அஃப்வெர்கி (Isaias Afwerki) மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
டைக்ரேயின் பிராந்திய தலைநகர் மெக்கெல்லை தனது படைகள் கைப்பற்றிய பின்னர், நவம்பர் பிற்பகுதியில் டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான போரை எத்தியோப்பிய அரசாங்கம் வென்றது. ஆனால், சிறயளவிலான சண்டைகள் தொடர்கின்றன.
அத்துடன், டைக்ரே போரில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளதுடன் இலட்சக் கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேறாதவாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் பிராந்தியத்தில் உணவு, நீர் மற்றும் மருந்து பற்றாக்குறை நிலவுகின்றது.
இதனைவிட, டைக்ரே பிராந்தியத்துக்குள் ஊடகவியலாளர்கள் மற்றும் வெளிநாட்டு உதவி நிறுவனங்கள் செல்வதற்கு அரசாங்கம் அனுமதியளிகவில்லை என்பதுடன், அங்குள்ள நிலைமையைக் கணக்கிட முடியாத நிலை காணப்படுகிறது.
மேலும், எத்தியோப்பியன் படைகளை ஆதரிப்பதற்காக டைக்ரேயில் எரித்திரிய துருப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை இரு நாடுகளும் மறுத்துள்ளன.
அத்துடன், டைக்ரேயில் உள்ள இராணுவத தளங்களைத் தாக்கி டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியே மோதலைத் தூண்டியது என அபியின் அரசாங்கம் தெரிவிக்கிறது.
இதேவேளை, கடந்த புதன்கிழமை, அமெரிக்க வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் டைக்ரேவுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வதற்கான அனுமதியை எத்தியோப்பிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
அத்துடன், அங்குள்ள அகதிகள் முகாம்களில் கொள்ளை, பாலியல் வன்முறை மற்றும் தாக்குதல்கள் பற்றிய நம்பகமான அறிக்கைகள் கிடைத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.