வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை போரதீவுப்பற்று பிரதேசசபை முன்னெடுத்து வருகின்றது.
மேலும் டெங்கு நோயின் தாக்கமும் நுளம்புகளின் பெருக்கமும் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களின் நன்மை கருதி இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த வதனமார் பூஜை செய்யும் ஆலயமாக கருதப்படும் கல்லடிப் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (புதன்கிழமை) சிரமதான நடவடிக்கைகள் மூலம் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆத்துவாளைகளும் புற்களும் முட்களும் பரந்து காணப்படுகின்ற காரணத்தினால் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனியின் தலைமையில் பிரதேசசபை செயலாளர் பா. சதீஸ்கரனின் வழி நடத்தலின் கீழ் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த சிரமதானத்தில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், வெல்லாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி,கல்லடிப் பிள்ளையார் ஆலய நிர்வாக சபையினர் பங்குகொண்டிருந்தனர்.
இன்று இவ்வாலயத்தில், தைப்பூசம் தினத்தை முன்னிட்டு ஆலயத்தில் வதனமார்களால் மிகவும் சிறப்பான முறையில் பூசை வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
வயலில் வேளாண்மை வெட்டி முதல் புதூர் பொங்கள் வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கால்நடைகள் வளர்க்கும் பண்ணையாளர்கள் முதல் பால் கறந்து பொங்கள் வழிபாடுகள் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.