‛உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அரசு உதவவில்லை. உதவி செய்வதாக அமைச்சர்கள் நடிக்கிறார்கள். தைரியம் இருந்தால் கார்கிவ், சும்மி நகரில் உள்ள இந்திய மாணவர்களை மீட்டு வரட்டும் பார்க்கலாம்'' என கர்நாடக மாணவர் ஆக்ரோஷமாக கூறினார்.
ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ‛ஆபரேஷன் கங்கா' என்ற பெயரில் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றனர்.இந்த பணியில் தனியார் விமானங்களுடன் இந்திய விமானப்படை விமானங்களும் இணைந்துள்ளன. அத்துடன் மீட்பு நடவடிக்கைக்கான ஒருங்கிணைப்பு பணியை மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி, ஜோதிர்ஆதித்ய சிந்தியா, கிரன் ரிஜூ, விகே சிங் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.உக்ரைனில் போர் நடப்பதால் அங்குள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா வழியாக மீட்கப்பட்டு வருகின்றனர். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட், ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட் ஆகிய இடங்களில் இருந்து இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் நாடு திரும்பி வருகின்றனர்.
மேலும் உக்ரைனில் நிலவும் போர் சூழலை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.இந்திய மாணவர்கள் அனைவரும் விரைவாக கார்கிவ் நகரில் இருந்து வெளியேற வேண்டும் என நேற்று இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருந்தது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினுடன் தொலைபேசி வழியாக பேசினார். அப்போதும், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். மேலும் கடந்த மாணவர் மீட்பு தொடர்பாக மூன்று நாட்களில் நான்கு முறை உயர்மட்ட குழுவை கூட்டி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவின் செயலாளர் பிரசாந்த் நரசிம்மா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் விமான நிலையத்தில் நின்று மாணவர் பேசுகிறார்.
அவர் கூறுகையில், ‛‛‛உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற அந்தநாட்டு போலீசார் பாதுகாப்பு செய்து தருகிறார்கள். மாணவர்கள் சொந்த செலவில் உக்ரைனில் பஸ்களை பிடித்து வெளியேறுகிறார்கள். இந்திய அரசு உதவி எதுவும் செய்யவில்லை. பஸ்களில் உள்ள இந்திய தேசியக்கொடியை பார்த்து அனைவரும் எங்களை விடுவிக்கிறார்கள். இதுதவிர இந்திய அரசு எதுவும் செய்யவில்லை. அமைச்சர்கள் உதவுவது இல்லை. உதவுவது போல் நடிக்கிறார்கள். உண்மையில் தைரியம் இருந்தால் கார்கிவ், சும்மி நகரில் உள்ள மாணவர்களை மீட்டு வரட்டும் பார்க்கலாம்'' என்றார்.