உக்ரைனில் 3000 இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் சிறை பிடித்து வைத்து இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் எங்கே சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தையும் புடின் வெளியிட்டு இருக்கிறார்.
உக்ரைனில் ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்கள், பொதுமக்களை மத்திய அரசு வெளியேற்றி வருகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவ உதவியுடன் எல்லைக்கு வரும் மக்களை ரோமானியா, போலந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா மீட்டு வருகிறது.
இந்த ஆபரேஷனுக்கு கங்கா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 15 விமானங்கள் இயக்கப்பட்டு 3000 பேர் வரை மீட்கப்பட்டு உள்ளனர். ஆனால் அதே சமயம் இந்திய அரசு விமானம் மட்டுமே அனுப்பியது, உக்ரைனில் இருந்து வெளியேற எங்களுக்கு உதவி செய்யவில்லை என்று இந்தியா திரும்பிய மாணவர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.உக்ரைனில் இன்னும் 18 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர். இவர்கள் வரும் நாட்களில் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 4000க்கும் அதிகமான இந்தியர்கள் போர் தீவிரமாக் நடக்கும் கார்கிவ் பகுதியில் உள்ளனர். இந்தியாவின் தூதரகம் கீவ் நகரத்தில் இருந்து தற்காலிகமாக லேவிவ் நகரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு 280 தமிழ்நாடு மாணவர்கள் இதுவரை மீட்கப்பட்ட நிலையில் 2223 தமிழ்நாடு மாணவர்கள் இன்னும் சிக்கி உள்ளனர்.