குமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டார் செட்டித்தெருவில் வசித்து வந்தவர் ஜோஸ்கான்பியர் (வயது47). இவரது மனைவி வனஜா(32). இவர்களுக்கு மஞ்சு(13), அக்ஷரா(12) என்ற 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 8 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
2 நாட்களுக்கு முன்பும் கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஜோஸ்கான்பியர் மனைவியுடன் கோபித்துக் கொண்டு வெளியே சென்றார். நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் குழந்தைகள் இல்லை. இருவரும் பள்ளிக்கு சென்று விட்டனர். இதனால் கணவன், மனைவிக்கிடையே மீண்டும் தகராறு மூண்டது. ஆத்திரம் அடைந்த ஜோஸ்கான்பியர் மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
உடனே ஜோஸ்கான்பியர் மனைவியின் உடலை துணியால் சுற்றி கட்டிலுக்கு கீழே தள்ளினார். அதன் பிறகு வாசலுக்கு வந்து அமர்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் மகள்கள் இருவரும் பள்ளியில் இருந்து வந்தனர். அவர்கள் தந்தையிடம் அம்மா எங்கே என்று கேட்டனர். உள்ளே இருப்பதாக ஜோஸ்கான்பியர் கூறினார்.
குழந்தைகள் உள்ளே சென்ற போது கட்டிலுக்கு அருகே ரத்தம் தேங்கி இருப்பதை கண்டனர். அவர்கள் கட்டிலுக்கு கீழே பார்த்த போது தாயார் இறந்து கிடப்பதை கண்டனர். அலறி துடித்த அவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓட முயற்சி செய்தனர். உடனே ஜோஸ்கான்பியர் குழந்தைகள் இருவரையும் வீட்டுக்குள் இழுத்துச் சென்றார். அவர்களின் கைகளை கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்தார். பின்னர் அவரும் வீட்டின் முன் கதவை மூடிக் கொண்டு வீட்டிற்குள்ளேயே அமர்ந்திருந்தார்.
நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் ஜோஸ்கான்பியர் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. அக்கம் பக்கத்தினர் இது பற்றி விசாரித்த போது இன்று பகல் 11 மணி அளவில் ஜோஸ்கான்பியரின் மகள் வீட்டில் இருந்து அலறி துடித்தபடி வெளியே ஓடி வந்தார். அவர் அக்கம் பக்கத்தினரிடம் தாயாரை, தந்தை குத்தி கொலை செய்து விட்டதாகவும், கட்டிலுக்கு கீழே பிணம் இருப்பதாகவும் கூறி அழுதார்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கோட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர். அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு வனஜாவின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. கணவர் ஜோஸ் கான்பியரை காணவில்லை. அவரை தேடிய போது அவர் இன்னொரு அறையில் தூக்குபோட்டு இறந்து கிடந்தார்.
இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் இன்று பகல் 11 மணி வரை சுமார் 43 மணி நேரம் கொலை செய்யப்பட்ட வனஜா உடலுடன் குழந்தைகள் இருவரும் நடுங்கியபடி இருந்து உள்ளனர்.
பிணத்துடன் இருந்ததால் குழந்தைகளின் உடல்நலமும் பாதிக்கப்பட்டது. மூத்த மகள் மஞ்சுவுக்கு கழுத்தில் கத்தியால் அறுக்கப்பட்டு ரத்தம் கொட்டி இருந்தது. அவரை மிரட்ட தந்தையே மகளை கத்தியால் கீறி இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.