பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளக் கட்டுமான பொருட்களை ஏற்றிச் சென்ற தமிழக அதிகாரிகள் கேரளாவுக்குள் வர அம்மாநில வனத்துறை அனுமதி அளிக்க மறுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை தேக்கடி புலிகள் காப்பக வளாகத்திற்குள் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளைக் கட்டுமான பொருட்களைக் குமிளி வழியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்றிச் சென்றனர்.அங்குள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை, உதவிப் பொறியாளர் அலுவலக பணிகளுக்காக இந்தப் பொருட்களை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
இருப்பினும், தமிழக அதிகாரிகள் கொண்டு சென்ற பொருட்களுக்குக் கேரள வனத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. அனுமதி கடிதம் இல்லை எனக் கூறி பெரியார் புலிகள் காப்பக நுழைவாயிலில் தமிழக அதிகாரிகளைக் கேரள வனத்துறை தடுத்து நிறுத்தி உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், இது தொடர்பாகத் தமிழக முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருக்குத் தெரியப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாகத் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கேரள வனத்துறையின் இந்த நடவடிக்கை அதிருப்தி அடைந்த தமிழக விவசாயிகள் குமிளியில் போராட்டம் நடத்தச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறை அதிகாரிகள், லோயர் கேம்பில் பகுதியில் விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து லோயர் கேம்ப் பகுதியிலேயே போராட்டம் நடத்திய விவசாயச் சங்க பிரதிநிதிகள் மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொறுப்பாளர்கள் கேரள வனத்துறையின் நடவடிக்கைக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் போராட்டக்காரர்களைக் கைது செய்து கூடலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.