பாம்பு பிடி மன்னரான வாவா சுரேஷ் பாம்பு பிடிக்கையில், பாம்பு கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வாவா சுரேஷ்(45). பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர், இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார். இதில் 200-க்கும் மேற்பட்ட பாம்புகள் அரியவகை ராஜநாகம் மற்றும் நாக பாம்பு வகையை சேர்ந்தவை.
விஷயம் வாய்ந்த கொடிய பாம்புகளை அசால்ட்டாக பிடிக்கும் இவர், அண்மையில் கோட்டயம் பகுதியை அடுத்த குறிச்சி குடியிருப்பு பகுதியில்நாக பாம்பு ஒன்று சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.
உடனே சம்பவ இடத்திற்கு சென்று பாம்பை லாவகமாக பிடித்த இவர், அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைக்க முயன்றார். அப்போது, திடீரென சீறியபடி, பாம்பு அவரது முழங்காலில் கடித்துள்ளது.
பாம்பு கடித்த பின்னும் சுரேஷ் தான் பிடித்த பாம்பை சாக்கு பையில் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். அதன்பின்னர், அதே இடத்தில் தலை சுற்றி மயங்கி விழுந்துள்ளார்.
உடனே அப்பகுதி மக்கள் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வீடியோ காட்சியானது சமூக வலைத்தளங்களில் பரவ பலரும் அவர் மீண்டு வர வேண்டும் என கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்