அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரத்தில், மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக ஜெயவர்த்தன் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையத்தில் முன்னாள் எம்பி ஆன ஜெயவர்தன் அளித்துள்ள புகாரில் , கடந்த 21ம் தேதி எங்கள் வீட்டுக்குள் நுழைந்த போலீசார், எனது தந்தை ஜெயக்குமாரை கைது செய்வதாக கூறினர். இதற்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை. இரவு நேரத்தில் குழந்தைகள், பெண்கள் இருக்கும் வீட்டில் போலீசார் வீட்டுக்குள் நுழைந்தது சட்டவிரோதமானது. லுங்கியுடன் இருந்த எனது தந்தையை வேஷ்டி மாற்றிக் கொள்ளக் கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. சர்க்கரை உள்ளிட்ட நோய்களால் உடல்நல பாதிப்புக்குள்ளாகி இருக்கும் எனது தந்தையின் மருந்துகளை எடுத்துச் செல்வதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. அவரை போலீசார் எங்கு அழைத்துச் சென்றனர் என்பது கூட எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
முன்னாள் சட்டப்பேரவை தலைவரான எனது தந்தைக்கு சிறையில் முதல் வகுப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாஜிஸ்ட்ரேட் ஏற்றுக்கொண்டார். இருப்பினும் முதல் வகுப்பு இல்லாத பூந்தமல்லி சிறையில் எனது தந்தை ஜெயக்குமாரை போலீசார் அடைத்தனர். தந்தை ஜெயக்குமார் கைது நடவடிக்கையில் மனித உரிமை மீறல் நடந்துள்ளது. இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனிடையே தனது சட்டையை கழற்றி விட்டு சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையத்தில் தாக்குதலுக்கு உள்ளான திமுக பிரமுகர் நரேஷ்குமார் புகார் அளித்துள்ளது கவனிக்கத்தக்கது.