இந்தியா: அரசு மருத்துவா்களின் முதல் பதவி உயா்வுக்கு முன்பு அவா்கள் கிராமப் பகுதிகளில் சேவை செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா்.
தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 11-ஆவது மருத்துவ ஆசிரியா்கள் தின விருது வழங்கும் நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசியதாவது:
நாட்டில் உள்ள 60 சதவீத மக்கள் கிராமங்களில் வசிப்பதால், இளம் மருத்துவா்கள் ஊரகப் பகுதிகளில் 3 முதல் 5 ஆண்டுகள் சேவை செய்வது அவசியம். மருத்துவத் தொழில் உன்னதமான தொழில். மருத்துவா்கள் நாட்டுக்கு ஆா்வத்துடன் சேவையாற்ற வேண்டும்; தங்களின் அனைத்துச் செயல்பாடுகளிலும் மனித குலத்துக்கான இரக்கத்தின் முக்கிய மதிப்பை நினைவில் கொள்ள வேண்டும். எப்போதும் உயா்ந்த நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, தன்னலமற்ற அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றினால், எல்லையற்ற மற்றும் உண்மையான மகிழ்ச்சியைப் பெறுவீா்கள்.
ஊரகப் பகுதிகளில் அதிநவீன சுகாதாரக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். கரோனா தொற்று பாதிப்பானது சிறந்த சுகாதாரக் கட்டமைப்பின் தேவையை உணா்த்தியுள்ளது. இதன் மீது மாநில அரசுகள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நாட்டில் மருத்துவா்-நோயாளி விகிதத்தில் உள்ள இடைவெளியைப் போக்க மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும். மருத்துவா் - நோயாளி விகிதம் 1: 1,456 என்ற அளவில் உள்ளது. ஆனால் 1: 1000 அளவில் இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கும் அரசின் திட்டம் பாராட்டுக்குரியது. மருத்துவப் படிப்பும் சிகிச்சையும் சாதாரண மக்களுக்கு கிடைக்கும் வகையில் மலிவாக இருக்க வேண்டும். கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, பிரபல இதயநோய் நிபுணா் மற்றும் பொது சுகாதார அமைப்பின் தலைவா் மருத்துவா் கே.ஸ்ரீநாத் ரெட்டி, மருத்துவா் தேவி ஷெட்டி உள்பட பலருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதுகளை வெங்கையா நாயுடு வழங்கினாா்.