பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர் களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
பாராலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதலில் வரலாற்று சிறப்பு மிக்க தங்கப்பதக்கம் பெற்றுள்ள அவனி லெகராவுக்கு எனது வாழ்த்துகள். தாங்கள் படைத்துள்ள பெரும் சாதனையால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
வட்டு எறிதலில் வெள்ளி வென்றுள்ள யோகேஷ் கத்தூனியாவுக்கும்; ஈட்டி எறிதலில் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ள தேவேந்திர ஜஜாரியா மற்றும் சுந்தர் சிங் ஆகியோருக்கும் எனது பாராட்டுகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளின் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லெகரா, வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் யோகேஷ் கதுனியா, ஈட்டி எறிதலில் வெள்ளி, வெண்கலம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, சுந்தர் சிங்குக்கு வாழ்த்துகள்.
பாராலிம்பிக் போட்டிகளில் ஒரே நாளில் இந்தியா 4 பதக்கங்களை வென்றது இதுவே முதல்முறை; இந்தியா அதிக பதக்கங்களை வென்றிருப்பதும் இந்தப் போட்டியில் தான். இந்தியா பெருமை கொள்வதற்கு காரணமான சாதனையாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-
டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்த விளையாட்டு வீரர் வினோத்குமார் வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
பாராலிம்பிக் தொடரில் பங்கேற்றிருக்கும் இந்திய அணியில் மகளிருக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் பவினா பட்டேல், உயரம் தாண்டும் போட்டியில் நிஷாத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்று இருப்பதும், வட்டு எறிதல் போட்டியில் வினோத் குமார் வெண்கலப் பதக்கம் வென்று இருப்பதும் நாட்டிற்கே பெருமை.
இந்தியாவுக்கு டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் 4 பதக்கங்கள் கிடைத்திருப்பது இந்தியாவிற்கு உலக அரங்கில் மென்மேலும் சிறப்பு சேர்க்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.