ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பா.ஜ.க. அரசு 2020 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில், மக்களாட்சி மாண்புகளை காலில் போட்டு மிதித்துவிட்டு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
டெல்லியில் கடந்த 2020 நவம்பர் 26 முதல் இன்றைய நாள் வரையில் 277 நாட்களாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அறவழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஐநூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிர் இழந்திருக்கிறார்கள்.
இந்திய விவசாயிகளின் போராட்டம் உலக அளவில் கவனத்தைப் பெற்று இருக்கிறது. ஆனால் மோடி அரசு விவசாயிகளின் கொந்தளிப்பை அலட்சிப்படுத்தி வருகிறது.
மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்து ஆதிக்கம் செலுத்தும் வகையில் மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் பகைச் சட்டங்களும் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானது ஆகும்.
இந்த நிலையில்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆகஸ்டு 28 -ம் நாள், ஒன்றிய அரசின் மூன்று வேளாண் பகைச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். அவருக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதனிடையே அரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தொகுதியான கர்னலில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது அரியானா காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட கொடூர தாக்குதல் நடந்துள்ளது. இதில் விவசாயிகள் ரத்தம் சிந்தியிருக்கிறார்கள்.
அடக்குமுறை மூலம் விவசாயிகளை வீழ்த்தி விடலாம் என்று பகல் கனவு காணுகிற அரியானா அரசுக்கும், அலட்சியப்படுத்துதல் மூலம் இத்தகைய அறப்போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்து விடலாம் என்று நினைக்கின்ற நரேந்திர மோடி அரசுக்கும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.