உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.
இதைத்தொடர்ந்து அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் 5 மாநில சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருக்கிறது.
இதற்கிடையே நாடு முழுவதும் ஒமைக்ரான் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் பரவலால் தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தலை தள்ளி வைக்க கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரம், ஒமைக்ரான் பரவல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
தற்போது ஒமைக்ரான் பரவல் நாடுமுழுவதும் அதிகரித்து வருகிறது. 21 மாநிலங்களில் 781 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் டெல்லியில் அதிகபட்சமாக 238 பேரும், அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 167 பேரும், கேரளாவில் 57 பேரும், தெலுங்கானாவில் 55 பேரும், குஜராத்தில் 49 பேரும், ராஜஸ்தானில் 46 பேரும், தமிழ்நாட்டில் 45 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் 186 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய மந்திரிகளுடன் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மத்திய மந்திரிகளும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் ஒமைக்ரான் பரவல் குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. தேர்தலை தள்ளி வைக்கலாமா? அல்லது மேலும் முன்னெச்சரிக்கையுடன் நடத்தலாமா என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் சூழ்நிலைக்கு தகுந்தவாறு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.
இதைத்தொடர்ந்து உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, அரியானா, மத்திய பிரதேசம், அசாம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.
ஜனவரி 3-ந் தேதி முதல் 15 முதல் 18 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஜனவரி 10-ந் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது.
ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி ஆகியவை குறித்தும் மத்திய மந்திரிகள் கூட்டத்தில் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
கடந்த வியாழக்கிழமை உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் மோடி ஆலோசனை நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.