இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியின் 4 ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அம்மாநிலத்தின் மண்டி தொகுதிக்கு ஒரு நாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு ரூ.11,000 கோடி மதிப்பிலான நீர்மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிகல் நாட்டிய மோடி இவ்வாறு பேசினார்:-
இமாச்சல பிரதேசத்தில் 4 ஆண்டுகளை பாஜக அரசு நிறைவு செய்துள்ளது. ஒரு மாநிலத்திற்கு இரண்டு வகையான வளர்ச்சி மாதிரிகள் இருக்கிறது. ஒன்று, ‘அனைவருக்குமான அரசு, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவர் மீதான நம்பிக்கை’ என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டது.
மற்றொன்று ‘சுயநல அரசு, குடும்ப நல அரசு’ என்ற கொள்கையை கொண்டது. இமாச்சல பிரதேசத்தில் முதல் கொள்கையின் அடிப்படையில் நிறைய வளர்ச்சி திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. கொரோனா காலத்திலும் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் தடையில்லாமல் மக்களுக்கு சென்றடைய உழைத்துக்கொண்டிருக்கிறோம்.
இமாச்சல பிரதேசம் நாட்டின் மிக முக்கிய மருந்து தயாரிப்பு மையமாக திகழ்கிறது. கொரோனா காலத்தில் பிற மாநிலங்களுக்கு மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் உதவியுள்ளது. வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி திட்டத்தை அறிவித்துள்ளோம்.
ஜனவரி 10-ம் தேதி முதல் முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் முதியோர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தையும் தொடங்குகிறோம். இந்த திட்டங்களில் இமாச்சல பிரதேசம் முன்னோடியாக திகழும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.