கரூர் மாவட்டத்தில் ஆயிரத்து 72 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதற்கட்டமாக 18 அரசுப்பள்ளிகளில் 20 கட்டிடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கும் பணி நடைபெறுவதாக ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
நெல்லையில் தனியார் பள்ளி கழிவறைச் சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்து இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் சிதிலமடைந்து காணப்படும் பள்ளிகளை இடிக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வரும் பழுதடைந்த கட்டிடங்களை இடிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் பேசிய ஆட்சியர், கரூர் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகள் என மொத்தம் 1072 பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதற்கட்டமாக 18 அரசுப்பள்ளிகளில் 20 கட்டடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கட்டிடங்களின் உறுதித் தன்மையை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் நடடிவக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்த ஆட்சியர் பிரபுசங்கர், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கட்டிடங்களை அத்துறை சார்ந்த அலுவலர்களும், ஊரக வளர்ச்சித்துறையின் பராமரிப்பில் உள்ள கட்டிடங்களை அதே துறை சார்ந்த அலுவலர்களும் தொடர்ந்து கண்காணித்து தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிலித்தார். இந்த ஆய்வின்போது, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பாதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.