மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இரத்த மாதிரியை மாற்றி ஏற்றிய நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் வந்தாறுமூலையை சேர்ந்த விதுலக்ஸனின் மரணம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களை ஒரு மாத காலத்திற்குள் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மட்டக்கள்பபு நீதிவான் நீதிமன்ற நீதிபதி குறித்த வழக்கினை விசேட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
வந்தாறுமூலையை சேர்ந்த விதுலக்ஸனின் மரணம் தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01ஆம் திகதி விபத்தில் படுகாயமடைந்த 09 வயதுடை விதுலக்ஸன் என்னும் சிறுவன் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், 19ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.
குறித்த சிறுவன் மரணம் தொடர்பில் பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான வழக்கு மட்டக்கள்பபு நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்டிருந்தது.
அவசர சிகிச்சை பிரிவில் இரத்தம் ஏற்றும் போது குறித்த சிறுவனின் இரத்த மாதிரிக்கு மாறான இரத்தம் ஏற்றப்பட்டதனால் குறித்த சிறுவன் இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்டிருந்தது.
இன்றைய தினம் விசாரணையின் போது குறித்த வழக்கு தொடர்பான சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்படாமை குறித்து கடுமையான ஆட்சேபனையினை தெரிவித்த மட்டக்களப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான், வழக்கினை விசேட குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை மேற்கொண்டு எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் நீதிமன்றில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக மரணமடைந்துள்ள விதுலக்ஸனின் தாயார் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைக்காக குறித்த வழக்கினை ஏப்ரல் 07ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
இதேநேரம் மகனின் இறப்பு தொடர்பான மருத்துவ அறிக்கையில் இரத்த மாதிரி மாற்றி வழங்கப்பட்டதனால் ஏற்பட்ட மரணம் என்று கூறப்பட்டுள்ள நிலையில், குறித்த வழக்கின் சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பல தடவைகள் கட்டளையிட்டும் பொலிஸார் அவர்களை ஆஜர்படுத்தவில்லை.
அவர்களை ஆஜர்படுத்தினால் தமது தொழிலுக்கு ஆபத்து ஏற்படும் என்று பொலிஸார் இன்று மன்றில் தெளிவாக கூறியுள்ளதாகவும், அதன் காரணமாக குறித்த வழக்கினை விசேட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றியதுடன், ஒரு மாத காலத்திற்குள் வழக்கினை முடிவுறுத்துமாறும் கட்டளையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கிற்கான உதவியை வழங்கிவரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் கே.கௌரியும் இந்த வழக்கு தொடர்பில் கருத்து தெரிவித்தார்.