தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பாடசாலையில் இன்றைய தினம் ஆசிரியை ஒருவர் அணிந்து வந்த ஆடை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியிருந்தது.
இந்த சம்பவத்தின் போது அதிபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியையும் தன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், குறித்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கருத்து வெளியிடுகையில்,
“பெற்றோர்கள் நாங்கள் வெளியில் இருந்த போது, திடீரென அலுவலகத்தில் இருந்த வந்த குறித்த ஆசிரியை எங்களை புகைப்படம் எடுத்தார்.
எனினும் பாடசாலை வளாகத்தில் அனுமதியில்லாமல் புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக நாங்கள் அந்த ஆசிரியையிடம் தெரிவித்திருந்தோம். எனினும், குறித்த ஆசிரியை அதனையும் மீறி புகைப்படம் எடுத்தார்.
இதன்போது எங்களது புகைப்படங்களை அழிக்குமாறு நாங்கள் கோரிய போதிலும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். வட்ஸ்அப் ஊடாக அனைவருக்கும் புகைப்படங்களை அனுப்பினார்.
இதனையடுத்து நாங்கள் கையடக்க தொலைபேசியை வாங்க முற்பட்ட போது அதிபர் மறித்தார். எனினும், அதிபரை குறித்த ஆசிரியை தள்ளிவிட்டார். இதன்போது இரத்த அழுத்தம் கூடிய நிலையில் மயக்கமுற்ற அதிபரை நாங்கள் வைத்தியசாலையில்” அனுமதித்தோம் என அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.
2017ம் ஆண்டும் இதே போன்றதொரு ஆர்பாட்டம் இடம்பெற்றது. ஆசிரியர்கள் சிலர் பாடசாலை கலாச்சாரத்திற்கு ஒவ்வாத வகையில் ஆடை அணிந்து வந்தமையால், பாடசாலை சமூகத்தினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
குறித்த பாடசாலையின் பண்பாட்டுக்கும் பாடசாலையின் கலாச்சார மரபிற்கும் உரிய ஆடைகளை அணிந்து வருமாறு நிர்வாகத்தினரால் கோரபட்டு, இருந்த போதிலும் சில ஆசிரியர்கள் தொடர்ச்சியாக முரண்பாட்டை ஏற்படுத்தி வருகின்றனர்.
இருப்பினும் 5 ஆசிரியர்கள் அதனை கருத்தில் கொள்ளாது “ஹபாயா” அணிந்து வந்தனர்.
இதன் காரணமாகவே 2017 ஆண்டு ஆர்பாட்டம் இடம்பெற்றது. அதன் பின்னர் இரண்டு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைகள், தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிந்த காலப்பகுதியில் 5 ஆசிரியர்களும் கல்வி திணைக்களத்தினால் வேறு பாடசாலைகளுக்கு பணிக்கு அமர்த்தபட்டனர்.
குறித்த காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றுசூழ்நிலை காரணமாக விசாரணைகள் தாமதமாகிகொண்டிருந்தமையால் 5 ஆசிரியர்களில் 2 பேர் வேறு பாடசாலைகளுக்கு நிரந்தரமாக இடமாற்றம் பெற்று சென்றனர்.
இருப்பினும் மீதமுள்ள மூவரும் மீண்டும் இன்றைய தினம் (02.02 2022) பாடசாலை நிர்வாகம் ஏற்காத உடை (ஹபாயா) அணிந்து வந்தமையால் பதற்றநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.