More forecasts: 30 day weather Orlando

கதை

  • All story
  • இதை விடவா அது சுமை?
இதை விடவா அது சுமை?
Jan03
இதை விடவா அது சுமை?
இதை விடவா அது சுமை?

முருகனின் மனைவி மாதவிக்கு திடீர் திடீரென்று ஆசை வந்துவிடும். உடனே கணவனை தொந்தரவு செய்வாள். அப்படி என்ன ஆசை என்று நினைக்கிறீர்களா? சம்பந்தம் இல்லாத இடத்தில் சம்பந்தமில்லாத ஆசையெல்லாம் வந்துவிடும். ஒரு சமயம் இந்தியாவில் உள்ள சிறு கிராமத்தில் குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது "நூடுல்ஸ்" வேண்டும் என்று கேட்டு, கேட்டதோடு விடாமல் தேடிப் பார்த்து வாங்கிவரவும் சொல்லியிருக்கிறாள். நடக்கிற காரியமா அது? அவளுக்கு சொல்லி புரியவைத்து பெரிய நகரம் ஒன்றிற்கு வந்த
பின் அவள் கேட்டதை வாங்கிக் கொடுத்திருக்கிறான் முருகன் .
இதுதான் அவள் பிரச்சனை. மாமா என்று அழைத்துக் கொண்டு பக்கத்தில் வரும்போதே அய்யோ இப்போது என்ன கேட்கப் போகிறாளோ என்று பயப்படும் அளவுக்கு அவன் நிலமை ஆகிவிட்டது.

அன்று ஒரு சனிக் கிழமை மெதுவாக எழுந்து குளித்து டிபன் சாப்பிட்டபின் சோபாவில் சாய்ந்தபடி டீவி ரிமோட் மூலம் சானலை மாற்றிக் கொண்டிருந்தான். ஒரு சானலில், "மாம்பழம்னா மாம்பழம் சேலத்து மாம்பழம்" என்ற பாடல் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அடுக்களையிலிருந்து மாதவி,

"இந்தாங்க, அந்த சானலை மாத்தாதிங்க, எனக்கு பிடித்த பாட்டு" என்று உத்தரவிட்டாள்.

"சரி, சரி மாத்தல" என்று சொல்லிக் கொண்டே அவனும் அந்தப் பாட்டைக் கேட்க ஆரம்பித்தான்.

பாட்டு முடிந்ததும், "மாமா, ஒன்னு கேட்டா கோபிச்சுக்க மாட்டீகளே?" என்று கேட்டாள்.

"சரி சொல்லு, ஒன்னும் கோபிச்சுக்க மாட்டேன்"

"எனக்கு மாம்பழம் சாப்பிடனும்போல இருக்கு, வாங்கிட்டு வருவீங்களா?" என்று பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.

அப்பாடா! இந்த தடவை பெரிதாக சோதனை ஒன்றுமில்ல. நல்ல வேளை இப்போது மாம்பழ சீசன் தான். இல்லாவிட்டால் ஒவ்வொரு இடமா மாம்பழத்தை தேடி இலங்கையில் அனுமன் சீதையைத் தேடி அலைந்த மாதிரி அலைய வேண்டி இருந்திருக்கும். அல்லது அவளை சமாதானப் படுத்துவதற்குள் மாம்பழ சீசன் இல்லாவிட்டாலும் மாம்பழ சீசன் வந்திருக்கும். இதற்காகவாவது பிள்ளையாருக்கு சிதறுகாய் ஒன்று போட வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டே,

"சரி, மத்தியானம் போய் வாங்கித்தரேன்" என்று சொல்லிவிட்டு அம்மாத தமிழ் இதழ் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தான்.

"மத்தியானம் சாப்பிட்டா நீங்க போக மாட்டீங்க. சாப்பிட்டவுடனே ஒரு குட்டித் தூக்கம். அப்புறம் சோம்பேறியாகிடுவீங்க"

"கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தால் ஒனக்கு பிடிக்காதே. சரி போயிட்டு வரேன்" என்று சொல்லிக் கொண்டே காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அன்று டாண்டினாங்க் மார்க்கெட்டில் நல்ல கூட்டம். கடைக்கு அருகிலே காரை நிறுத்த இடம் கிடைக்காமல் கார் பார்க்கை இரண்டு மூன்று தடவை சுற்றி வந்தும் பலன் இல்லாததால் சற்று தூரத்தில் காரை நிறுத்திவிட்டு மார்க்கெட்டுக்குள் சென்றான்.

அப்போது மாம்பழ சீசன் என்பதால் சைஸ் வாரியாக பல கடைகளில் விதவிதமாக பெட்டிகளில் மாம்பழங்கள் அடுக்கி வைக்கப் பட்டு நிரம்பிக் கிடந்தன. பேரம்பேசி சில பெட்டி மாம்பழங்களை வாங்கிக் கொண்டு இரண்டு கைகளில் தூக்கி வயிற்றோடு அணைத்தபடி காரை நோக்கி நடந்தான். கார் கொஞ்ச தொலைவில் தான் இருந்தது. இருப்பினும் அந்த பெட்டி மாம்பழங்கள் கையில் சுமையாகக் கனத்தது. கொஞ்ச தூரம் நடந்தபின் தரையில் கொஞ்ச நேரம் இறக்கி வைத்தான். பின் திரும்பவும் கையில் எடுத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தான். காரையடைந்து பூட்டில் பழங்களை வைப்பதற்குள் பெரிய சுமைபோல் உணர்ந்தான். பின் காரைக் கிளப்பிக் கொண்டு சென்றவன் இடையில் உள்ள ஒரு சிகப்பு விளக்கு நிறுத்தத்தில் சிக்னலுக்காகக் காத்திருக்க நேர்ந்தது.

அப்போது ஒரு நிறைமாத கர்ப்பிணி அடிவயிற்றை இடது கையால் தாங்கியபடி மெதுவாக மிகவும் முடியாமல் பாதசாரிகளுக்கான பாதையில் நடந்து போய்க் கொண்டிருந்தாள். அவளது முகம் சோர்வாலும் வயிற்றுச் சுமையாலும் வாடிப்போய் இருந்தது. அதைப் பார்த்த முருகனுக்கு புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானோதயம் ஏற்பட்டதுபோல் அந்த எண்ணம் ஏற்பட்டது. சில
பெட்டி மாம்பழங்களை கொஞ்சதூரம்வரை தூக்கிவர கடினமாக இருந்ததே. அதையும் இடையில் ஒரு தடவை கீழே இறக்கி வைத்து ஓய்வெடுத்தபின் தான் தூக்கிக் வர முடிந்தது. அந்த கொஞ்ச நேரத்துக்கே சிரமமாய் இருந்ததே. ஆனால் இப்பெண் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு செல்கின்றாளே. என்னைப் போல் கனக்கிறது என்று சொல்லி கீழே இறக்கி வைக்கக்கூடிய சுமையா அது? குழந்தை பிறக்கும்வரை சுமக்க வேண்டுமே. சரியாக உட்கார முடியாது, எழுந்திருக்க முடியாது. நன்றாக புரண்டுகூட தூங்க முடியாதே. இப்படியெல்லாம் அப் பெண் குழந்தை பிறக்கும்வரை சிரமப்படுவாளே என்று எண்ணியதும் அவனை எண்ணி அவனுக்கே வெட்கமாக இருந்தது. பெண் எவ்வளவு பெருமைக்குரியவள் என்று எண்ணமும் அவனுக்குள் வந்தது. இனி அவன் மனைவி அவனிடம் எங்கே எதைக் கேட்டாலும் சலித்துக் கொள்ளக்கூடாது என்று எண்ணியபடியே வீடு வந்து சேர்ந்தான்.

"மாதவி, மாதவி! மாம்பழம் வாங்கி வந்துட்டேன்" என்று கூறியபடியே வீட்டுக்குள் நுழைந்தான்.

"என்ன மாமா! மாம்பழம் வாங்கிட்டு வந்துட்டீங்களா?" என்று கேட்கும்போதே அவள் கண்களில் தெரிந்த மகிழ்ச்சியின் பிரகாசத்தை அவனால் உணர முடிந்தது.

மாதவி, மாதவி என்று அழைத்துக்கொண்டே வந்தவன் அவளைப்பார்த்ததும் அப்போதுதான் புதிதாகப் பார்ப்பதைப்போல கண்கொட்டாமல்
பார்த்தபடி அப்படியே உறைந்து போனான். அதைப் பார்த்து ஒன்றுமே விளங்காமல்,

"மாமா, என்ன ஆச்சு உங்களுக்கு! என்னைக் கூப்பிட்டுகிட்டே வந்தவங்க என்னைப் பார்த்ததும் ஒன்னுமே பேசாம அப்படியே நின்னுட்டீங்களே?"
என்று சொல்லியபடியே அவனைத் தொட்டு உலுக்கினாள்.

அப்போது தன்நினைவுக்கு திரும்பியவன், "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை" என்று சொல்லி சமாளித்தான்

ஆனால் உண்மையில் அவனுக்கு அவள் மீது இதுவரை இல்லாத ஒரு தனிப்பட்ட அன்பும் மதிப்பும் ஏற்பட்டது. அவளும் மூன்று மாத கருவை வயிற்றினில் சுமந்து கொண்டல்லவா இருக்கிறாள்.

-சங்கர சுப்பிரமணியன்.

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 14 (01:34 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 14 (01:34 am )
Testing centres