மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது கணினி விசைப்பலகையில் புதிய அம்சமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில், செயற்கை நுண்ணறிவு அல்லது ஏஐ சாவியை மைக்ரோசொப்ட் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் 11 இயக்க முறைமை மென்பொருளை (os) உபயோகிக்கும் பயனர்கள் இதன்மூலம் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவியான கோபிலட்டை அணுகலாம் என மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் தாக்கம்.
மேலும், தகவல்களைத் தேடவும், மின்னஞ்சல்களை வடிவமைக்கவும் மற்றும் படங்களை உருவாக்கவும் கோபிலட் மென்பொருளை பயனர்கள் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
மைக்ரோசொப்ட் நிறுவனம் 1994ஆம் ஆண்டில் விண்டோஸ் மெனு உபயோகத்துக்கான ஸ்டார்ட் சாவி ஒன்றை விசைப்பலகையில் இறுதியாக அறிமுகப்படுத்தியது.
பின்னர் 30 ஆண்டுகள் இடைவெளியில், அதிகரிக்கும் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்துக்கு ஈடுகொடுக்கும் வகையிலான ஏஐ சாவி ஒன்றை, தனது விசைப்பலகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
மைக்ரோசொப்டுடன் இணைந்து செயல்படும் மடிகணினி மற்றும் கணினி உற்பத்தியாளர்கள் இந்த புதிய சாவியை அறிமுகப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய மாற்றம்.
தற்போது விசைப்பலகையில் உள்ள ஸ்பேஸ் சாவியின் வலதுபுறம் குறித்த ஏஐ சாவி இடம்பெற உள்ளது.
வெறும் இணையவழிச் சேவைகள் மட்டும் இல்லாமல் உள்பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்த கோபைலட் செயல்படும் எனக் கூறப்படுகிறது.
மைக்ரோசொப்ட்டின் வன்பொருள்(hardware) துணை நிறுவனங்கள் இதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் பயன்பாட்டாளர்கள் தங்களது கணினியை அப்கிரேட் செய்துகொள்வது அவசியம் என கூறப்படுகிறது.
புதிதாக கணினி வாங்க விரும்புவோர், இந்த மாற்றங்களை உள்ளடக்கிய விசைப்பலகையை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.