Back

கட்டுரை

  • All Articles
  • பேச்சும் முறையும்
பேச்சும் முறையும்
Dec28
பேச்சும் முறையும்
பேச்சும் முறையும்:

பேச்சு என்பது சாதரண விவகாரம் ஒன்றும் இல்லை. என்னப்பா பேச்சு என்றால் பேச்சு தானே அது என்ன அவ்வளவு பெரிய விவகாரமா என்று எண்ண வேண்டாம். உண்மையிலேயே சிந்திக்க வேண்டிய மிகவும் பெரிய விவகாரம் தான்.

அதிகமாக பேசினாலும் இவன் என்ன வளவள என்று பேசிக்கொண்டே இருக்கிறான் என்றும் உளறுவாய் என்றும் பெயர் ஏற்பட்டுவிடும். அதேசமயம் பேசாவிட்டாலும் அல்லது குறைவாகப் பேசினாலும் உம்முனா மூஞ்சி என்றும் பேசவே காசு கேட்பான் என்றும் பெயர் ஏற்படும். பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பதும் பேச வேண்டாத இடத்தில் அதிகம் பேசுவதும் தவறு. உதாரணத்துக்கு துக்கம் நடந்த இடத்தில் அமைதியாக இருக்க வேண்டும் அல்லது மிகக் குறைவாகப் பேசவேண்டும். அதேவேளை மகிழ்ச்சி பொங்கும் இடத்தில் யாரோ நம் சொத்தை கொள்ளை அடித்து சென்று விட்டதைப் போல மௌனமாகவும் எதையோ பறிகொடுத்ததுபோல் பேசாமலும் இருக்கக் கூடாது.

புத்திமதி சொல்வது பொதுவாகவே யாருக்கும் பிடிக்காது. அதனால் நாம் யாருக்கு புத்தி சொல்கிறோம் என்பதில் படுகவனமாக இருக்கவெண்டும். சில சமயங்களில் புத்தி சொல்கிறோம் என்ற பெயரில் வீண் வம்பை விலைக்கு வாங்கி விட்டு வந்து விடக்கூடாது. மூடனுக்கு புத்தி சொன்னால் கேடு வரும் என்று பழமொழியே இருக்கிறது.

சிலரிடம் பேசும்போது அவர்கள் நன்றாகப் பேசக்கூடியவர்களாயிருந்தும் அமைதியாக இருப்பார்கள். அப்படிப் பட்டவர்களிடம் அவர்களையும் பேசவிட்டே நாம் பேசவேண்டும். இல்லாவிடிடில் நாம் பேசுவதில் அவர்களுக்கு
உடன்பாடில்லை என்பதை புரிந்துகொண்டு நம் பேச்சைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து நாம் பேசிக் கொண்டேயிருந்தால் நம்மை பேசவிட்டு அவர்கள் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருப்பார்கள் அல்லது நம்மை ஆழம் பார்ப்பார்கள்.

நம்முடைய பேச்சு மற்றவர்களைக் கவரும்படியாக இருக்க வேண்டும். வெறுப்பு தட்டும்படியோ அல்லது சலித்துக் கொள்ளும்படியோ இருந்துவிடக்கூடாது. ஒரு காலத்தில் திரு. மு. கருணாநிதி அவர்களும் திரு. சி. என். அண்ணாத்துரை அவர்களும் சென்னையில் ஓர் இடத்தில் இரண்டு மணி நேரம் பேசிவிட்டு அதே சென்னையில் மற்றொரு இடத்தில் பேசப்போகும் போது அவர்களைத் தொடர்ந்து அக்கூட்டமும் அவர்கள் பேச்சைக் கேட்பதற்காக பின் தொடரும் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சிலர் பேசும் கூட்டங்களில் ஆட்களே இருக்க மாட்டார்கள். அல்லது அவர்கள் பேச ஆரம்பிக்கும் போது இருக்கும் சொற்ப கூட்டமும் கலைந்து விடும்.

ஒன்றைப் பற்றி ஒருவரிடம் பேசும்போது அதை திரும்பத் திரும்ப சொல்லக் கூடாது. அப்படி சொல்ல வேண்டுமானால் அது சொல்லப்படும் நபரையும் அல்லது சொல்லப்படும் செய்தியையும் பொருத்தது. ஒரு சிலரிடம் சிலவற்றைப்
பற்றிச் சொல்லும்போது அது அவர்களை பாராட்டுவதாகவோ அல்லது வேண்டாத மற்றவர்களைப் பற்றியோ இருந்தால் அதை எத்தனை தடவை சொன்னாலும் அதை மிகவும் இரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால்
அதுவே அவர்களை குறைகூறுவதாக உணர்ந்தால் அதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதுடன் இதையே எத்தனை தடவை சொல்வீர்கள் என்று நம்மையே திருப்பிக் கேட்பார்கள்.

ஒருவரிடம் ஒன்றைக் கூறினால் கொஞ்ச நேரத்தில் அது நம்முடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒலிபரப்பாகிவிடும். அப்படிப் பட்டவர்களிடம் இரகசியங்களையும் மனதைப் பாதிக்கும் விவகாரங்களையும் சொல்லக்கூடாது. இவர்களிடம் நம்மைப்பற்றி பெருமைப்பட வேண்டிய செய்திச் சொன்னால் நமக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும். ஆனால் இப்படிப்பட்டவர்கள் பெருமை தரும் செய்தியை பரப்புவதில் அவ்வளவு ஆர்வம் காட்டமாட்டார்கள். மாறாக நமக்கு இழுக்கு ஏற்படும் செய்தி என்றால் அதை அதிக சிரத்தை எடுத்து பரப்புவதில் மெய் வருத்தம் பாரார் கண் துஞ்சார் கருமமே கண்ணாய் இருப்பர்.

இன்னும் ஒருவகையினர் தனக்கு தெரிந்ததை உடனே எல்லொருக்கும் சொல்லி விடவேண்டும். அப்படிச் சொல்லாவிட்டால் அவர்கள் தலையே வெடித்து விடும். இவர்கள் இடம் பொருள் ஏவல் என்று எதையும் பொருட்படுத்துவதில்லை. எதிரில்
இருப்பவர் உயிரிடன் இருக்கிறாரா இல்லையா என்றுகூட பொருட்படுத்தாமல் அவர்கள் சொல்ல வந்ததை ஒரு இயந்திரத்தைப் போல சொல்லி முடித்து விடுவார்கள்.

பேச்சில் அடக்கமும் பணிவும் வேண்டும். எல்லாமே நமக்குத் தெரிந்திருந்தாலும் நமது மேதாவித் தனத்தை காட்டவோ தெரியாதவரை மட்டம் தட்டவோ கூடாது. அதே சமயம் தமக்கு ஏதாவதொன்று தெரியாவிட்டாலும் அதை தெரிந்ததாக சிலர் காட்டிக்கொள்வர். தெரியாததை தெரியாது என்று சொல்வதில் என்ன தவறு. அதைத் தெரியாது என்று சொல்வதில் என்ன கௌரவக் குறைவு வந்து விடப்போகிறது. தெரியாததைத் தெரிந்தது போல் நடித்து பின் தெரியாது என்பது தெரியவந்தால் அப்போது ஏற்படும் அவமானத்தை விட முதலிலேயே தெரியாது என்று நேர்மையாகச் சொல்லிவிட்டால் எவ்வளவு கௌரவம் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை.

இன்னும் சிலர் மற்றவர்கள் அடையும் வேதனைய அறிந்து மனதுக்குள் மிகவும் மகிழ்வார்கள். இவர்கள் பேச்சு மிகவும் சாதுரியமாக இருக்கும். சிலர் நமக்கும் வேறொருவருக்கும் பகை என்பதை தெரிந்து கொண்டபின் அவர்களைப்பற்றிப் பேசினால் நமக்கு பிடிக்காது மற்றும் அதனால் நம் மனது புண்படும் என்று அறிந்தும் அவர்களைப் பற்றி நம்மிடம் வேண்டுமென்றே பெருமையாகப் பேசி நாம் அடையும் வேதனையைப் பற்றி உள்ளுக்குள் மகிழ்வார்கள். இவர்களைப் பற்றி என்ன சொல்வது? இதே நிலை இவர்களுக்கு ஏற்பட்டால் இவர்கள் மனது என்ன பாடுபடும் என்று எண்ணிப் பார்க்கும் அளவுக்கு பண்பற்றவர்கள்.

இதையெல்லாம் புரிந்து கொண்டு நாம் நடந்து கொண்டால் திருவள்ளுவர் கூற்றுப்படி சொல்லிழுக்குப் படாமல் நாம் வாழலாம். இதையெல்லாம் சொல்வது எளிது நடைமுறை வாழ்க்கையில் கடினம் என்கிறீர்களா? எதையும் சிறிதாவது முயற்சி செய்து பார்க்கலாம் அல்லவா? அதனால் நாம் இழக்கப் போவது ஒன்றுமில்லை அல்லவா? எனவே முயற்சி செய்து பார்ப்போம்.


-சங்கர சுப்பிரமணியன்.
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 19 (07:23 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 19 (07:23 am )
Testing centres